திருப்பாலைக்குடி இணைய தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

Wednesday, June 29, 2011

நபிவழி நடப்போம்

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
ஒவ்வொரு முஸ்லிமும் தனது உயிரை விட உயர்வாக உத்தம நபி(ஸல்) அவர்களை நேசிப்பது கட்டாயக் கடமையாகும். நபி(ஸல்) அவர்களை நேசிக்காமல் ஒருவர் முஃமினாக முடியாது.

“நம்பிக்கையாளர்களுக்கு அவர்களது உயிர்களை விட நபியே மிக்க மேலானவராவார்…” (33:6)
இது குறித்து நபி(ஸல்) அவர்கள் கூறும் போது “உங்களில் ஒருவர் தனது பெற்றோர், பிள்ளைகள் மற்றும் முழு மனித சமூகத்தையும் விட என்னை அதிகமாக நேசிக்காத வரையில் முஃமினாக முடியாது!” எனக் குறிப்பிட்டார்கள்.
நேசத்தின் வெளிப்பாடு:
நபி(ஸல்) அவர்கள் மீது உயர்வான நேசம் எல்லா முஸ்லிம்களிடமும் இருக்கின்றது. ஆனால் அந்த நேசம் உண்மை பெற வேண்டும் என்றால் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றுவதே இதற்கு இருக்கும் ஒரே வழியாகும். சிலர் தாம் அல்லாஹ்வை நேசிப்பதாகக் கூறினார்கள்.

அதற்குச் சோதனையாகப் பின்வரும் வசனத்தை அல்லாஹ் அருளினான்;
“நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந் தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான், இன்னும், உங்கள் பாவங்களை உங் களுக்கு மன்னிப்பான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாவான் என்று (நபியே!) நீர் கூறுவீராக!” (3:31)
ஒருவர் அல்லாஹ்வை நேசிப்பவராக இருந்தால் அவர் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டும். நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றினால் அவரை அல்லாஹ்வும் நேசிப்பான்; அவரது பாவங்களை மன்னிப்பான். இந்த இரு பாக்கியங்களும் அவருக்குக் கிட்டும்.
இந்த வசனத்துக்கு அடுத்த வசனம் இப்படி அமைகின்றது;
“அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்று (நபியே!) நீர் கூறுவீராக! அவர்கள் புறக்கணித் தால் நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களை நேசிக்க மாட்டான்.” (3:32)
இங்கே அல்லாஹ்வையும், அவரது தூதரையும் பின்பற்றுமாறு ஏவப்படும் அதே நேரம் அப்படிச் செய்யாத காஃபிர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை என்றும் கூறப்படுகின்றது. நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றாவிட்டால் அல்லாஹ்வின் நேசம் கிட்டாத அதே நேரம் அவர்களை அல்லாஹ் காஃபிர்கள் எனக் குறிப்பிடுவதும் கவனிக்கத் தக்கதாகும்.

Tuesday, June 28, 2011

மண்ணறை வாழ்க்கை

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

-K.L.M. இப்ராஹீம் மதனீ
உலகத்தில் பிறக்கும் எல்லா உயிர்களும் இறப்பது நிச்சயம். இதை முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் கூட ஏற்றுக் கொள்கின்றார்கள். எப்போதாவது ஒரு நாள் இறப்போம் என்பதை எல்லோருமே நம்புகின்றார்கள். ஆனால், அவர்கள் நம்பக்கூடிய மரணத்திற்கும், நாம் நம்பக்கூடிய மரணத்திற்கும் பெரிய வித்தியாசம் இருக்கின்றது. அதாவது, “மரணத்திற்குப் பின் ஒரு வாழ்க்கை இல்லையென” அவர்கள் கூறுகின்றார்கள். நாமோ, “மரணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை இருக்கின்றது” என நம்புகிறோம். நாம் மரணித்துவிட்டால் நம்மை கப்ரில் அடக்கம் செய்வார்கள் அங்கே நமக்கு உயிர் ஊட்டப்படும். அதன்பின் இரு மலக்குகள் நம்மிடம் மூன்று கேள்விகள் கேட்பார்கள், சரியான விடை சொல்பவர்களுக்கு, சுவர்க்கமும், தவறான விடை சொல்பவர்களுக்கு நரகமும் என முடிவு செய்யப்படும் எனவும் நம்புகிறோம். இதனை, பின்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது.

ஒரு அன்சாரித் தோழரின் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்காக நபி (ஸல்) அவர்களுடன் சென்றோம். கப்ரடியில் சென்ற போது உட்குழி தோண்டப்படாத நிலையில் இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் கப்ருக்கு அருகில் அமர்ந்து கொண்டு ஒரு குச்சியினால் பூமியை கிளறிக் கொண்டிருந்தார்கள். எங்களின் தலைகளின் மீது பறவைகள் அமர்ந்திருப்பது போன்று (அமைதியாக) நாங்களும் அந்தக் கப்ருக்கு அருகாமையில் அமர்ந்தோம். (திடீரென) நபி (ஸல்) தன் தலையை உயர்த்தி நீங்கள் கப்ரின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடுங்கள் என இரண்டு அல்லது மூன்று முறை கூறி பின்வரும் வார்த்தைகளைக் கூறினார்கள். இறைவிசுவாசியான அடியான் ஒருவன் உலகத் தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டு மறுமையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கையில், (சக்ராத்தின் நேரத்தில்) சூரிய ஒளிக்கு ஒப்பான பிரகாசம் கொண்ட முகத்துடன் வானத்திலிருந்து வானவர்கள் சிலர் அவரிடம் வருவார்கள். இவர்கள் தங்களுடன் சுவர்க்கத்து கபன் துணிகளிலிருந்து ஒரு கபன் துணியையும், சுவர்க்கத்தின் நறுமணங்களிலிருந்து நறுமணத்தையும் வைத்துக் கொண்டு அவருடைய பார்வைக்கு எட்டும் தூரமளவு அமர்ந்திருப்பார்கள். அப்பொழுது உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து, அவரருகில் அமர்வார். அவரை நோக்கி, நல்ல ஆத்மாவே! நீ ஏக இறைவனுடைய மன்னிப்பை நோக்கியும் அவனுடைய திருப்தியை நோக்கியும் இந்த உலகிலிருந்து வெளியேறிவிடு என்று கூறுவார். தோல் பையிலிருந்து (அதனை வளைத்தால்) நீர் வழிந்து விடுவது போன்று (அந்த ஆத்மா உடலில் இருந்து இலகுவாக) வெளியேறி விடும். அந்த உயிரை எடுத்ததும் கொஞ்ச நேரம் கூட கையில் வைத்துக் கொள்ளாமல் அந்தக் கபனில் (கொண்டு வந்த) மணத்தோடு வைத்து விடுவார்கள். உலகத்தில் இருக்கும் கஸ்தூரி வாசனையை விட மிக மணம் வீசக்கூடியதாக அது இருக்கும். (பின்பு அந்த உயிரை அல்லாஹ்விடம் கொண்டு செல்வார்கள்) வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகாமையில் அந்த உயிரை கொண்டு போகும் போதெல்லாம் இது யாருடைய நல்ல உயிர்? என அவ்வானவர்கள் கேட்பார்கள். அதற்கு உலகில் இவருக்கு சொல்லப்பட்ட நல்ல பெயரைக் கொண்டு இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும். இவருக்காக முதல் வானத்தை, திறக்கும்படி அவ்வானவர் வேண்டுவார், அவருக்காக முதல் வானம் திறக்கப்படும். ஒவ்வொரு வானத்திலும் உள்ள மலக்குகள் அடுத்த வானம் வரை (அந்த உயிரை) பின் தொடருவார்கள். இப்படி ஏழு வானம் வரை அதனை எடுத்துச் செல்வர். அப்போது ஏக இறைவன், ஆத்மாவைச் சுமந்து சென்ற வானவர்களை நோக்கி, என் அடியானுடைய செயல்களை ‘இல்லிய்யீனிலே’ (நல்லடியார்களுடைய செயல்களின் பதிவேடுகள் இருக்குமிடத்திலே) பதிந்து விட்டு (விசாரணைக்காக) பூமியிலுள்ள அவருடைய உடலில் (கப்ரில்) அவருடைய ஆத்மாவைச் சேர்த்து விடுங்கள் என்று கூறுவான். (அவரின் உயிரை அவரின் உடலில் மீட்டப்படும்) அவரிடத்தில் இரு மலக்குகள் வந்து அவரை அமரவைத்து, உன்னுடைய இறைவன் யார்? எனக் கேட்பார்கள். என் இறைவன் அல்லாஹ் என்று கூறுவார். உன்னுடைய மார்க்கம் எது? எனக் கேட்பார்கள், எனது மார்க்கம் இஸ்லாம் எனக் கூறுவார். உமக்கு அனுப்பப்பட்ட தூதர் யார்? எனக் கேட்பார்கள். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் எனக் கூறுவார். அது உமக்கு எப்படித் தெரியும்? என அவ்விருவரும் கேட்பார்கள். நான் குர்ஆனை ஓதினேன். (அதன் மூலம்) அவர்களை ஈமான் கொண்டு உண்மைப்படுத்தினேன் எனக் கூறுவார். அப்போது வானத்திலிருந்து ஓர் அழைப்பாளன் (அல்லாஹ்) அழைத்து என் அடியான் உண்மை சொல்லிவிட்டான் என்று சொல்லப்படும். ஆகவே அவருக்கு சுவர்க்கத்திலிருந்து ஒரு விரிப்பை விரித்து விடுங்கள். இன்னும் சுவர்க்கத்திலிருந்து ஒரு வாசலையும் திறந்து விடுங்கள் என்று சொல்லப்படும். அதன் வழியாக அவருக்கு நல்ல வாசனைகளும், நறுமணமும் வந்து கொண்டிருக்கும். அவருடைய கண் எட்டிய தூரத்திற்கு அவருடைய கப்ரு விசாலமாக்கப்படும். இன்னும் அவரிடத்திலே நறுமணம் வீசக்கூடிய, நல்ல ஆடை அணிந்த, அழகிய தோற்றமுள்ள ஒருவர் வந்து, இதுவே (உலகில்) உமக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும். உமக்கு சந்தோஷம் தரக்கூடிய ஒன்றைக் கொண்டு நற்செய்தி கூறுகின்றேன் என்பார். (அதற்கு கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்) நற்செய்தி கூறுபவரைப் போன்றே உன் தோற்றம் இருக்கின்றதே, நீர் யார்? எனக் கேட்பார். நான்தான் உன் நல் அமல் என அம்மனிதர் கூறுவார். அப்போது அவர், இறைவா! என் குடும்பத்தவரிடத்திலும், என் பொருளிடத்திலும் நான் செல்வதற்காக, கியாமத்து நாளை (வெகு சீக்கிரம்) கொண்டு வருவாயாக! இறைவா! கியாமத்து நாளை (வெகு சீக்கிரம்) கொண்டு வருவாயாக எனக் கூறுவார்.